Saturday, July 26, 2008

இஸ்லாமும் சிவில் தேசமும்

ஆங்கில மூலம் – ஸஅத் அத்தீன் அல் உஸ்மானி

(பொதுச்செயலாளர் மொரோகோ இஸ்லாமிய கட்சி)


ட்டம், பிரபஞ்சம் என்பவற்றிற்கு இடையேயும், எமது மார்க்கச் சட்டங்கள் எமது நடைமுறைச் சட்டங்கள் என்பவற்றிற்கும் இடையே நிலவும் இடைத்தொடர்புகள் குறித்த விடயங்கள் மீளாய்விற்கும் கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களாக முதன்மைபெறுகின்றன.

அவ்வாறான முயற்சி, ஒரு புதிய பார்வையுடன் கூடியதாக இருத்தல் அவசியமாகும், அத்தகைய பார்வை குறுகிய முரண்பாடான சிந்தனைகள், வழிமுறைகளை விட்டும் மிகவிசாலமான அமைதி கூட்டிணைவு என்பவற்றை நோக்கி நகரும் ஒரு இலக்கை அடையாளப்படுத்துவதாக இருத்தல் அவசியம்.

எனவெ என் முன்னால் ஒரு வினா எழுகின்றது, இஸ்லாமும் இஸ்லாமிய சமூகங்களும் பெறும்பான்மை மக்களின் விருப்பின் அடிப்படையில், தேர்தல்களின் மூலம் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப்பொற்று அதிகபட்சம் பெறும்பான்மை விருப்பின் அடிப்படையில் சட்டத்தைப் பிரயோகிக்கும் முறைமைகளைக் கொண்ட சிவில் தேசங்களுடன் எந்தளவு தூரம் உடன்பாட்டுடன் இருக்கின்றார்கள்?

இதற்கு பதிலளிக்கும் நோக்கில் எனது வாசிப்புகள், எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன். நாம் பின்வரும் விடயத்தை முதன்மையாக புரிந்து கொள்தல் அவசியம்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்வியலை நோக்கும் பொழுது உஸூலுல் பிக்ஹுடைய அறிஞர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியலில் அவர்(ஸல்) ஒரு இமாமாக (நாட்டின் தலைவராக) நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள், நிகழ்வுகள் என்பற்றின் அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியல், சட்டவியல் சார்ந்த அடிப்படை மூலதத்துவங்கள் பெறப்பட்டுள்ளன, மாற்றமாக நபிகளாரின் பொதுவான வாழ்வியலிலிருந்து அல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள். இம்முறைமையானது நவீன முஸ்லிம் உலகின் அரசியல் நடத்தைகளுடன் தொடர்புடைய, நபிகளாரின் (ஸல்) வாழ்வியலில் இதுவரை பரீட்சித்துப் பார்த்திராத எம்மைவிட்டும் நழுவிவிட்ட பல செயற்பாடுகளின் மீது புதிய ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. மேலும் மேற்படி அம்சமானது சமகால மனித நடத்தைகளின் பயன்பாட்டிலிருந்தும் எம்மைத் தடுத்த வரலாற்றின் வழியாக நாமே எம்மீது சுமத்திக் கொண்ட இருக்கமான விலங்கிலிருந்தும் சிந்தனைப் பாங்கிலிருந்தும் சமகால முஸ்லிம் உலகை விடுதலை செய்கின்றது.

நபித்துவ செயற்பாடுகளின் பல்தன்மை

“வஹியின் வழிகாட்டலைப் பெற்ற எல்லா நபித்துவத்தின் செயற்பாடுகளும் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் அணுகப்படக் கூடிய தன்மை கொண்டன.” அதாவது நபியவர்கள் ஒரு இமாம் என்ற ரீதியில் அல்லது அவர் ஒரு யுத்த தளபதி என்றவகையில், இறைத்தூதர் என்ற வகயில், மார்க்க வழிகாட்டி என்றவகையில், சாதாரண குடிமகன் என்றவகையில், குடும்பத்தலலவர் என்றரீதிய்ல், கனவன் என்ற ரீதியில் என அவரது செயற்பாடுகள் பல்தனமை கொண்டன. உஸூலுல் பிக்ஹுடைய அறிஞர்கள் பலரும் பலதரப்பட்ட கருத்தை மேற்படி விடயத்தில் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருசாரார் அத்தகைய பிரிவுமுறையானது நபித்துவத்தின் இயல்பைப்பாதிக்கும் என்று வாதிடுகின்றார்கள், அவார்களுள் முதன்மையானவர் இமாம் அபீ முஹம்மத் இப்னு குதைபா அல் தின்னூரி (ஹி276) அவர் தனது நூலான “த வில் முக்தலfப் அல் ஹதீஸ் ( Ta’wil Mukhtalaf al-Hadith (Figurative Interpretation of the Different Prophetic Traditions) என்ற நூலில் இதுகுறித்துப்பேசுகின்றார். அடுத்து அல் காழி இய்யாத் அல் யஹ்ஸெப் (ஹி544) என்பவர் அவாரது நூல் “அல் சிபா பி தஆரிப் ஹுகூக் அல் முஸ்தபா. Al-Shifa’ bi Ta`rif Huquq al-Mustafa (The Healing by the Rights of the Recognition of the Chosen One) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார், மேலும் இப்னுல் கையூம் அல் ஜவ்ஸி (ஹி 751)அவர்களும் தமது பலதரப்பட்ட ஆக்கங்கள் நூல்கள் என்பவற்றில் இதுகுறித்து மிக ஆழமாக பேசியுள்ளார், எமக்கு மிக கிட்டிய இஸ்லாமிய அறிஞரான இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் அத்திஹ்லவி (ஹி 1176) அவர்களும் தனது ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிஙாஹ் (Hujat Allah al-Baleghah.) என்னும் நூலில் இது குறித்துப்பேசியுள்ளார்.

இன்னுமொருசாரார் அதற்கு மாற்றமான கருத்தைக்கொண்டுள்ளார்கள், அதாவது நபிகளாருடைய செயற்பாடுகள் பல்தன்மை கொண்டன என்பது அவர்களது கருத்தாகும். அவர்களுள், “மகாதிஸுஸ்ஷரீஆ அல் இஸ்லாமிய” (Maqasid al-Shari`ah al-Islamiah) என்னும் நூலை எழுதியவர் சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் இத்துறையில் அதிகம் பங்காற்றியவருமான ஷெய்க் முஹம்மத் அல் தஹர் இப்ன் அஹ்ஸர் நபிகளாரின் செய்பாடுகளின் பல்தன்மை குறித்து சார்பான கருத்தைக் கொண்டுள்ளார்கள், இன்னும் இஸ்லாமிய நீதித்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான ஷிஹாப் அல்தீன் அல்குராfபி (ஹி 684) நபிகளாரின் செயற்பாடுகளின் பல்தன்மை குறித்துப் பேசுகின்றார். இவருடைய பிக்ஹு கலைக்களஞ்சியமாகிய அஸ்ஸக்ஹிராவில் (Az-Zakhirah ) பல அத்தியாயங்களில் இதுகுறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.இறுதியாக இவரின் “அல் இஹ்காம் fபி தம்யீஸ் அல் fபத்வா அன் அல் ஹகம் வ தஸர்ருபாத் அல் காழி வல் இமாம்” (Al-Ihkam fi Tamiez al-Fatwa `an al-Hakam wa Tasarufat al-Qadi wa al-Imam) என்னும் நூலிலும் இதுவிடயத்தில் மிகவும் துள்ளியமான கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் நபிகளாரின் பல்தன்மையான செய்ற்பாடுகளின் வகைகளையும் விளக்கியுள்ளார்.

இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில் நபிகளாரின் பல்தன்மையான செய்ற்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குகின்றனர்.

1. சட்டம்சார் செயற்பாடுகள்: முன்மாதிரியான வழிமுறையொன்றினை நிறுவும் நோக்குடன், நபிகளாரால் நிறுவப்பட்ட செய்ற்பாடுகள், உத்தரவுகள், அறிவுரைகள், போன்றன இவ்வகையினைச் சாரும், அவை நபிகளாரைப் பின்பற்றும் எல்லோராலும் ஏற்று நடைமுறைப் படுத்தப்பட்ட, நடைமுறைப் படுத்தப்படுகின்ற அம்சங்களாகும். இதன் உப பிரிவுகள் வருமாறு.

o பொதுச்சட்டங்கள்: மறுமைநாள் வரை எல்லா முஸ்லிம்களாலும் பின்பற்றப்படும் நோக்கில் முன்மொழியப்பட்ட, செய்து காண்பிக்கப்பட்ட, அனுமதியளித்த சட்டமாக மொழிந்த விடயங்கள் இவ்வகையினைச்சாரும்.

o விஷேட சட்டங்கள்: ஒரு குறிப்பிட்ட இடம், காலம், அல்லது மனிதன், நிலை என்பற்றினை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்ட விடயங்கள், இவை தலைமைத்துவம் சார்ந்தும், நீதித்துறைசார்ந்தும், தனிப்பட்ட விவகாரங்கள் சார்ந்ததுமாகவும் இருக்கும். இவை எல்லா முஸ்லிம்களுக்கும் உரிய விடயங்கள் அல்ல மாற்றமாக குறிப்பிட்ட நிகழ்வுடன் தொடர்புடைய ஒருவருடன் அல்லது ஒரு சாராருடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயங்களாகும்.

2. சட்டம்சாரா செயற்பாடுகள்: முஸ்லிம்களால் பொதுவாகவோ, குறித்த சந்தர்ப்பத்துடன் தொடர்புடையவராலோ முன்மாதிரியாக எடுத்து பின்பற்றப்படும் நோக்கற்றவகையில் இடம்பெற்ற அம்சங்களாகும். அன்றாட வாழ்வியலின் நடத்தைகள், தனிப்பட்ட விடயங்கள் இவ்வைகையினைச் சாரும், மேற்படி விடயங்கள் குறித்து அறிந்து கொள்வதானது மார்க்கத்தையும் நபித்துவத்தின் மிகத்துள்ளியமான வழிகாட்டலையும் அறிந்து கொள்வதற்கு துணை செய்யும், ஏனெனில் நபிகளாரின் எல்லா நடத்தைகளையும் ஒரே இயல்புடன் நோக்குவது மார்க்கம் குறித்த மயக்க நிலையினையேற்படுத்தும்.

மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட சொற்பாவனைகளுடன் முன்வைக்கப்படும் கூற்றுக்கள் அவை மொழியப்பட்ட சூழல் பிரதிபலிப்புக் களை தெளிவுபடுத்துவனவாக அமைவதில்லை. மேலும் அவை நபித்துவத்துவத்தின் நடத்தைகளில் இருக்கின்ற புதுமைத்தன்மையையும் அவை முன்மொழியப்படும் விசேட சந்தர்ப்பங்கள் குறித்தும் கவனம் செலுத்தத்தவறி விடுகின்றன, நபிகளாரின் சட்டநோக்குடைய வழிகாடல்கள், கற்பிக்கும் நோக்குடைய வழிகாட்டல்கள், போதனைகளுடன் கூடிய அம்சங்கள் என்பன குறித்த தெளிவற்ற விடயங்கள் நபித்துவத்தின் நடத்தைக்கோலத்தை துள்ளியமாக அறிந்துகொள்வதற்கு இடையூராகாவே அமையும். இவ்வாறான சூழலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னா அல்லது வழிமுறைகள் வெறும் தத்துவார்த்த அம்சங்களாகவும் வினைத்திறனுடன் கூடிய நடைமுறை உலகுடன் எத்தகைய தொடர்புமற்ற சட்டங்களாகவுமே நோக்கப்படும். சிக்கல்கள் நிறைந்த மனிதவாழ்வு, மனித வாழ்வு சந்திக்கும் புதுவரவுகளாகிய அரசியல், சமூக, பொருளாதார யாதார்த்த நிலைகளுக்கு முன்னால் சுன்னா அல்லது நபிகளாரின் வழிமுறையானது எவ்வித தாக்கத்தையும் செலுத்தாத தொகுக்கப்பட்ட தத்துவங்களின் கோர்வையாக நோக்கப்படும்.

இமாம் ஷிஹாப் அல் தீன் அல் ஹுராபி நபித்துவ செயற்பாடுகளின் பல்தன்மைகள் குறித்துப்பேசுகின்றார், வித்தியாசமான தன்மைகளுடன் கூடிய பல்வேறு அம்சங்களுள் சட்டம்சார்ந்து எழுகின்ற அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொள்ளப்படவேண்டும், என்கின்றார் என்பதற்கு மேற்குறித்த விளக்கம் பதிலாக அமைகின்றது. மேலும் இமாம் ஷிஹாப் அவர்கள் “மேற்படிவியத்தில் உள்ள தெளிவான தன்மையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கௌரவப்படுத்துவதாகவும், அவரை உரிய முறையில் பின்பற்றுவதாயும் அமையும். இதுவிடயத்தை மிக நெருங்கி அவதானிப்பது மார்க்கத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும்” எனவும் உறுதிபடக் கூறுகின்றார்.

இப்னுல் கையும் ஜவ்ஸி அவர்களும் ஒரு முக்கியமான விதியொன்றை முன்வைக்கின்றார்; “நபிகளாரின் கூற்றுக்களில் அவரது தனிப்பட்ட வாழ்வுடன் தொடர்புடைய விடயங்கள் பொதுவான சட்டங்களுடன் இணைத்து நோக்கப்படுதல் தவிர்க்கப்படவேண்டும், அதேபோன்று பொதுவான சட்டமொன்று நபிகளாரின் தனிப்பட்டவிடயமாக நோக்கப்படலும் ஆகாது. எனினும் முரண்பாடுகளும் தவறுகளும் இவ்விடயத்தில் நிகழக்கூடியதே”

இமாமாக (தேசத்தின் தலைவராக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடத்தைக்கோலம்.

இமாம் என்ற ஸ்தானத்தில் நபியவர்களின் செயற்பாடுகளானது: ஒரு தேசத்தின் தலைவராக நபிகளாரின் (ஸல்) வகிபாகத்தைக் குறித்துக் காட்டுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு தேசத்தின் தலைவர் என்ற ரீதியில் சமூகத்தில் ஷரீஆவின் உண்மையான நோக்கத்தை அடைதல் பொறுட்டு, நன்மைகள் நிகழ்வதற்கு வழிசமைத்து, எவ்வித தீமைகளுக்கும் இடமளிக்காது, தேவையான முடிவுகளை மிகத்துள்ளியமாக வகுத்து, சமூகத்தை நிர்வகித்தார்கள். சில அறிஞர்கள் இத்தகைய நடவடிக்கைகள் ஷரீஅவின் மீது கட்டியெழுப்பப்பட்ட கொள்கைகள் அல்லது தலைமைத்துவம் சார் அடிப்படைகள் என அடையாளம் செய்கின்றனர்.

ஒரு இமாம் (தேசத்தின் தலைமைத்துவம்) சார்ந்து நாம் முன்வைக்கும் இவ்விடயத்தில் சில முன்னைய இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கினுள் நபிகளாரின் நடத்தைகளுடன் தொடர்புடைய சந்தர்ப்ப சூழல்களுக்குள் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், அல் ஹுராபி அவர்கள் முன்மொழிவது பேன்று ஒரு இமாம் (தேசத்தின் தலைவர்) என்ற ரீதியில் நபிகளாரின் (ஸல்) செயற்பாடுகள், அவரின் ஏனைய செயற்பாடுகளை விட்டும் வேறாகவே நோக்கப்படவேண்டும், தலைமைத்துவம் சார்ந்த செயற்பாடுகள் அதாவது வஹியின் பின்புலத்துடன் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்புகள், சட்டரீதியான விடயங்கள், ஒரு உயரிய ஸ்தானத்தில் வலுவுடையன, ஏனையவை அவற்றின் அடியாக எழுந்தவையே, இமாம் என்னும் வகிபாகம் இரண்டு முக்கிய வித்தியாசங்களைக் கொண்டது அவை,

1. அல் குராபி கூறுவதைப்போல : சாதாரண இமாம் மக்களை பொது நலனின்பால் வழிநடாத்துவதற்கும், தீமைகளிலிருந்து காப்பதற்கும், குற்றவாளிகளை அடக்குவதற்கும், அதிகாரத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், தனது எல்லைக்குட்பட்ட நிலப்பிரதேசத்தில் மக்களுக்கான வாழிடத்தை ஏற்படுத்துவதற்குமான அதிகாரத்தைப் பெற்றவர்.

2. அடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட இமாம், இது ஒரு முfப்திக்கோ,அல்லது நீதிபதிக்கோ வழங்கப்படுவதல்ல, இதுவே இமாமத்தின் உயரிய இலக்கை நிறைவுசெய்யும் அதியுச்ச அதிகாரமாகும்.

நபிகளாரின் (ஸல்) தலைமைத்துவ நடத்தைகளை மேற்குறித்த இரண்டு இமாமத்தின் பண்புகளுடன் இணைத்து இங்கு ஆராய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாமியி சட்ட மூதறிஞர்கள் பலர் இமாமத் குறித்துக் கொண்டிருந்த பார்வைகளை இவ்விடயத்துடன் தொடர்புபடுத்தி நோக்க முடியும். நபிகளாரின் தலைமைத்துவம் (இமாமத்) நான்கு மிக முக்கிய வகைகளைக்கொண்டது.

01 விசேட சட்டம் சார் செயற்பாடுகள்:

ஒரு குறிப்பிட்ட காலம், இடம், விசேட சந்தர்ப்பம் என்பவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கொள்கை, அந்தஸ்து என்பவற்றை நெறிப்படுத்தும் நோக்குடன் மட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், நேரடி வஹியின் அடிப்படையில் அமையாத நபிகளாரின் தலைமைத்துவம் சார் நடத்தைகள். இப்னுல் கையூம் அவர்கள் அதனை “மட்டுப்படுத்தப்பட்ட விதிகள்” என அடையாளப்படுத்துகின்றார். அதாவது அவை ஒரு குறித்த நேரத்தில், ஒரு குறித்த இடத்தில் ஒரு குறித்த சந்தர்ப்பத்தில் உம்மத்தின் மறைமுகமான விருப்பின் அடிப்படையிலேயே அவை இடம்பெற்றன என்கின்றார், அல் தஹ்ர் இப்னு அஸ்ஹவ்ர் “மட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்கம்” என்கின்றார். ஏனெனில் அவை முழு உம்மத்தையும் உட்படுத்தி மேற்கொள்ளப்பட்டதல்ல அத்துடன் நபிகளாரைப்பின்பற்றும் எல்லா தலைவர்களும் இமாம்களும் அத்தகைய சட்டங்களை கண்மூடித்தனமாக பிரயோகித்துவிடவும் முடியாது. நபிகளார் அவற்றை நடைமுறைப்படுத்திய அதே சந்தர்ப்பசூழல் மற்றும் முறைமைகள் குறித்த பூரணமான தெளிவின் பிற்பாடே அத்தகைய சட்டங்களைப் பிரயோகிக்க முடியும். இதனைத்தெளிவு படுத்தும் விதத்தில் அல் ஹுராபி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்; இம்மாதிரியான சட்டப்பிரயோகமானது மிகச்சாதாரணமாக இடம்பெறமுடியாது, சமகாலத்தில் நிலவும் இமாமத்தின் அனுமதி மற்றும் பூரண உடன்பாடு என்பவற்றின் பின்னரே நடைமுறைப் படுத்தப்படவேண்டும். ஏனெனில் நபிகளார் அவற்றை தனது இமாமத்தின் கீழேயே மேற்கொண்டார்கள். இவ்வாறான சட்டப்பிரயோகங்களின்போது குறித்த இமாமின் அல்லது அதிகாரபூர்வமான சபையிடம் அனுமதி பெறப்பட்டிருத்தல் அவசியமாகும். ஏனெனில் இங்கு ஷரீஆவின் உண்மையான நோக்கம் நிறைவு செய்யப்படுதல் வேண்டும். ஏனெனில் நபிகளார் குறித்த சூழல் குறித்த தெளிவான அறிவின் பின்னணியிலேயே மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். குறுகிய கண்ணோட்டத்துடன் மேற்படிவிடயங்களில் காலடிவைப்பது ஷரீஆவின் நோக்கத்தையும் ஏன் சுன்னாவின் நோக்கத்தைக்கூட மறுதளிப்பதாகவே அமையும்.

உதாரணமாக நபிகளாரின் பின்வரும் கூற்றின்பால் எமது கவனத்தை செலுத்துவேம் “ உரிமை கோரப்படாத நிலத்தில் விவாசாயம் செய்பவனுக்கே அந்நிலம் சொந்தம்” என நபிகளார் நவின்றார்கள். இதனை ஒரு பொதுவான நடைமுறையாக மக்கள் எடுத்துக்கொண்டனர், இம்முறைமையானது நபிகளாரின் காலத்திற்கு மட்டும் உரித்தான ஒரு விசேட அம்சமாகவே அறிஞர்களால் நோக்கப்படுகின்றது, நபிகளாரின் வபாஅத்தைத்தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்நடைமுறையானது இமாமின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இமாம் அபூ ஹனீபா அவர்கள் இது குறித்து குறிப்பிடும்பொழுது “உரிமை கோரப்படாத நிலத்தின் பயிரிடுவதும் அதனை உரிமைகோருவதும் இமாமின் அனுமதியுடன் மட்டுமே ஆகுமாக்கப்பட்டதாகும்” என்கின்றார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபிகளார் கூறினார்கள் “ யாரெல்லாம் யுத்த பூமியில் எதிரியொருவனை கொலை செய்கின்றீர்களோ, அவர்கள் அவனது உடமைகளை முழுமையாக எடுத்து கொள்ளுங்கள்” அல் ஹுராபியுடைய கருத்தின் பிரகாரம் இது ஒரு விசேட சட்ட முன்மொழிவாகும். நபிகளார் (ஸல்) ஒரு விசேட சூழலின் அடிப்படையிலேயே இதனை முன்மொழிந்தார்கள், யுத்ததின்பால் ஆர்வமூட்டுவதற்காகவும், யுத்தகள தேவையின் அடிப்படையிலுமேயே இத்தகைய ஒரு முன்மொழிவினை நபிகளார் செய்தார்கள். எனவே இவ்வாறான விசேட தேவைகளின்போது மட்டும்தான் இத்தகைய சட்டங்கள் பிரயோகிக்கப்படவேண்டும் மாற்றமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. இத்தகைய சட்டங்களே விசேட பண்புடைய இமாமத்தின் சட்டப்பிரயோகங்களாகும்.

2. பொதுவிருப்பு சார் செயற்பாடுகள்:

நபிகளாரின் சட்டம்சார் செயற்பாடுகளில் அவதானிக்கப்படுகின்ற இரண்டாவது முக்கியமான அம்சம் “பொதுவிருப்பு சார் செயற்பாடுகளாகும்” அல் இஸ் இப்ன் அப்துஸ்ஸலாம் அவர்கள் “தலைமைத்துவம் என்பது பொதுவிருப்பை இழக்காதிருப்பதும் பொதுவிருப்பிற்கு பங்கமேற்படுத்தாமலிருப்பதுமே” என்கின்றார். அல் ஹுராபியுடைய கருத்தின் பிரகாரம் இமாமாத்தின் முக்கிய பண்பாக இதனைக்கொள்கின்றார், “அரசியலில் பொதுவிருப்பை நடைமுறைப்படுத்துதலில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்கின்றார்” சட்டத்துறையானது ஏலவே தொகுக்கப்பட்ட சட்ட மூலங்கள், முன்னைய நடைமுறைகள், ஆதாரங்கள், தரவுகள் என்பவறை சார்ந்தே இருக்கும், ஆனால் “தலைமைத்துவம் என்பது மிகச்சரியான பொதுவிருப்புடன் சார்ந்தே இருக்கும்” எனவே இமாம் என்பவர் இவை இரண்டையும் மிகத்துள்ளியமாக அறிந்து நடைமுறைப் படுத்துபவராகவே இருப்பார். ஹராம் (தீமை) இடம்பெறுவதைத்தடுத்தல், கிரிமினல்களுக்கு எதிராக போரிடல், அதிகாரத்தை நிலைநிறுத்துதல், மக்களை வாழவைத்தல் என்கின்ற இமாமின் பொறுப்புகள் மிகவும் சரியாக இவ்விரு அம்சங்களைக்கொண்டும் அமுல்படுத்தப்படவேண்டும்.

ஒரு தடவை நபிகளார் குர்பான் கொடுக்கப்பட்ட மாமிசத்தை 3 இரவுகளுக்குமேலாக சேமித்துவைப்பதை ஹராம் என அறிவித்தார்கள். “மூன்று நாட்களுக்கு உரியதை மட்டும் சேமித்து வையுங்கள் ஏனையவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்தளியுங்கள்” என்று கூறினார்கள். அடுத்தவருடம் “நான் மதீனாவிற்கு வரும் அரபுகளுக்கு மாமிசத்தை பகிர்ந்தளிப்பதற்காக முன்னர் அவ்வாறு கூறினேன், ஆனால் இப்போது உண்ணுங்கள், பகிர்ந்தளியுங்கள், உங்களுக்குத்தேவையான அளவை சேமித்து வையுங்கள்” என்றார்கள்.

அதாவது முன்னைய வருடத்தில் நிலவிய பொருளாதார நிலைமைகளைக்கருத்தில் கொண்டே நபிகளார் குர்பான் மாமிசத்தை மூன்று நாட்களுக்குப்போதுமானதை வைத்துக்கொண்டு எஞ்சியதை பகிர்ந்தளிக்கும்படி கூறினார்கள், ஆனால் மறுவருடம் நிலைமை சீராகவே, தேவையான அளவை சேமிக்கும்படி கூறினார்கள். ஆயிஷா(ரழி) பிரிதொரு அறிவிப்பில் அறிவிக்கின்றார்கள் “ குறித்தவருடத்தில் மக்கள் உணவுக்காக தவித்தார்கள் எனவே நபியவர்கள் எழியோருக்கு செல்வந்தர்கள் வழங்கவேண்டும் என எதிர்பார்த்தார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

பொதுவிருப்பம் என்பது சட்டரீதியான ஆட்சியின்போது மிகவும் முக்கியமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய அம்சமாகும். அஹ்மத் முஹம்மத் சாகிர் “பொதுவிருப்பினை அறிந்து செயலாற்றும் பண்பு நபிகளாரின் செய்ற்பாடு, மக்கள் விருப்புக்கு இசைவான தலைவர் என்றும் வெறும் சட்டங்களால் மக்களை ஆட்சி செய்த தலைவர் அல்ல என்பதையும் காட்டி நிற்கின்றது” என்கின்றார்.

03. சுய இஜ்திஹாதுடன் தொடர்புடைய செயற்பாடுகள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியான வஹியின்மூலம் அறிவிக்கப்படும் மார்க்க விடயங்கள், வழிகாட்டல்கள், போதனைகள், ஏவல்கள் விலக்கல்கள் என்பவற்றை உள்ளது உள்ளபடியே உம்மத்தினருக்கு தெரியப்படுத்தினார்கள். எப்போதெல்லாம் நபியவர்கள் ஒரு இமாமாக தலைவராக இருந்து சுயமாக முடிவுகளை எடுத்தாரே அது அவரது சொந்த இஜ்திஹாதின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். அவை சரி அல்லது பிழை என்ற இரண்டில் ஒன்றைச் சேரும் தன்மைகொண்டன. இவ்விடயத்தில் எல்லா சட்ட அறிஞர்களும் உடன்பாடு காணுகின்றார்கள். முஹம்மத் இப்னு அலி அஸ்ஷவ்கானி குறிப்பிடும்பொழுது; “ நாளாந்த நடத்தைகள், விருப்புவெறுப்புகள், யுத்தம் சார் முடிவுகள் போன்றவற்றில் நபிகளார் மேற்கொள்ளும் தனிப்பட்ட இஜ்திஹாதிற்கு மாற்றுக்கருத்துகள், முடிவுகள் இருக்க முடியும் என்பதில் எல்லா சட்ட அறிஞர்களும் உடன்படுகின்றார்கள்” உதாரணமாக அல்ராஸியும் இப்னு ஹஸ்மும் தெரிவித்திருப்பதைப்போல, ஹத்fபான் கோத்திரத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, மதீனாவின் ஈச்சத் தோட்டங்களின் மகரந்தச் சேர்கை சார் கருத்து, போன்ற நபிகளாரின் தனிப்பட்ட இஜ்திஹாதுடன் சார்ந்த விடயங்களில் மாற்றுக்கருத்து இருக்க முடியும் என்ற கருத்துடன், அபூபக்ர் அல்-ஜஸஸ், அபுல் ஹஸன் அல் பஸரி, இமாம் அல் ஜுவைனி, இமாம் பஹ்ருத்தீன் அல் ராஸி ஆகியோருடன் தகியுத்தீன் இப்னு தைமியா. இப்னு பத்தா ஆகியோர், “நபிகளார் அல்லாஹ்வின் முன்னிலையில் பொறுப்புக்கூறும் கடமையுடையவர், அவரது சுயமான முடிவுகள் மிகவும் தெளிவானவை பத்ரு கைதிகள் விடயத்தில் அபராதம் பெறுவதை ஏற்றுக் கொண்டமை, தபூக் யுத்தத்தில் பங்கேற்காதவர்களின் காரணங்களை ஏற்றுக் கொண்டமை ஏனையோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்காமை போன்ற விடயங்கள் நபிகளாரின் சுயமான இஜ்திஹாதுடன் தொடர்பு பட்டவையே, அதற்கான அனுமதியும் நபிகளாருக்கு வழங்கப்பட்டிருந்தது, எனவேதான் அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகின்றது – அவர்களது விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்தாலோசியுங்கள் (3:159) எனவே அத்தகைய விடயங்களில் வஹியின் நேரடி வழிகாட்டல்கள் இருந்திருக்க முடியாது, அவ்வாராயின் கலந்தாலோசியுங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்ற கருத்தையும் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு நோக்குமிடத்து நபிகளாரின் பெரும்பாலான அரசியல் நடத்தைகள், முடிவுகள் என்பன சுய இஜ்திஹாதுடனேயே இடம்பெற்றுள்ளன என்பதைக்கண்டு கொள்ளமுடியும்.

தோழர்களுடன் கலந்தாலோசிப்பதுவும் அவர்களது கருத்துக்கலுக்கு முக்கியத் துவமளிக்கும் நபிகளாரின் பண்பு நபிகளாரின் இத்தைகைய சுய இஜ்திஹாதினை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இவை நேரடி வஹியுடன் தொடர்புடைய விடயங்களாக இருந்திருப்பின் நபிகளார் ஸஹாபாக்களின் கருத்துக்களை அறிவதில் ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள், ஆனால் நபிகளார் மிகவும் கூடிய விருப்புடன் அத்தகைய கலந்தாலோசனைகள், சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களுடன் ஆலோசனை நடாத்துதல், விடயங்களை கற்றுக்கொள்தல் என்பவற்றில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

நபிகளாரின் தோழர்கள் நபிகளாருடைய வகிபாகத்தை நன்கு புரிந்திருந்தார்கள் நபிகளாரை ஒரு இறைத்தூதராகவும், அரசியல், இராணுவ தலைவராகவும் அவர்கள் இருவேறு நிலைகளில் வைத்து நோக்கினார்கள், சில கட்டளைகளை எவ்வித மாற்றுக்காருத்தும் இன்றி ஏற்றுக்கொண்டார்கள், இன்னும் சில இடங்களில் தமக்கு புரியாதவற்றை புரிந்து கொள்ள முற்பட்டார்கள் உதாரணமாக அல் ஹுபாப் இப்னு முன்ஸிர்; பத்ர் களம் தெரிவு செய்யப்பட்டது அல்லாஹ்வினாலா அல்லது வேறு யுத்தம் சார் கருத்தின் அடிப்படையிலா? என்று விளக்கம் கோரினார்கள், அதற்கு நபிகளார் பதிலளித்தார்கள், இன்னுமொரு இடத்தில் ஸஅத் இப்னு முஆத் (றழி), ஸஅத் இப்னு உபாதா (றழி) ஆகியோர் ஹந்தக் யுத்தகளத்தில் வைத்து “அல்லாஹ்வின் தூதரே இது உங்கள் விருப்பு அதனால் நாங்கள் செய்கின்றேமா, அல்லது அல்லாஹ்வின் கட்டளை என்பதனால் செய்கின்றோமா, அல்லது எங்களது நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் காரியமா என்று வினவினார்கள்? இது ஸஹாபாக்கள் நபிகளாரின் செயற்பாடுகளை நன்கு பகுத்து அறிந்திருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்றாகும்.

மார்க்கம் சார செயற்பாடுகள்:

இமாம்கள் உலக விவகாரங்களில் ஐயப்பாடுடைய விடயங்களின் மீது தனிப்பட்ட இஜ்திஹாதினைப் பிரயோகித்து முடிவுகளை மேற்கொள்வது பொறுத்தமானதாகும். அத்துடன் மேற்படி நடவடிக்கையானது “இபாதத் சார்ந்த விடயங்களில் தனிப்பட்ட இஜ்திஹாதினை வரவேற்பதில்லை அவை மிகவும் தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டவைகளாகும், அதேபோன்று மறுமையுடன் தொடர்புடைய விடயங்களிலும் எவ்வித இஜ்திஹாதும் வேண்டியதில்லை எனவே ஆட்சியாளருக்கு இவ்விடயங்களில் எவ்வித அதிகாரமும் இல்லை”

உலக விவகாரங்களையும் மறுமையுடன் தொடர்புடைய விவகாரங்களையும் குறித்து மிக நுணுக்கமாகத் தெரிந்து கொள்வது முக்கியமாகும், மேற்கத்தேய தோற்றப்பாட்டின் பிரகாரம் மார்க்கத்திற்கும் உலக விவாகாரங்களுக்கும் இடையில் நிலவும் தொடர்பற்ற தன்மை, இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உலக மறுமை விடயங்களில் பொருந்தாது, இஸ்லாத்திற்கென ஒரு தனிப்பட்ட தனித்துவமான நிலைப்பாடு இருக்கின்றது, அதனூடாகவே நாம் உலக மறுமை விவகாரங்களை அணுகவேண்டும். மார்க்க விடயங்கள் என்னும் போது அங்கு இரண்டு வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கின்றன (religious) மார்க்கம் சார் என்றும் (religion) மார்க்கம் என்றும் இரண்டு பதங்கள் ஷரீஆ நூல்களில் பிரயோகிக்கப் பட்டுள்ளன முன்னையது எல்லா மனித நடத்தைகளையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது. அரசியல், நாளாந்த நடத்தைகள் என எல்லாம் இங்கு இடம்பெற முடியும். இங்கு எண்ணங்களே முடிவுகளை நிர்ணயிக்ககும் அல்லாஹ்வின் திருப்த்திக்காக மேற்கொள்ளப்படுதல் என்பதே இங்கு முக்கியமாக இருக்கும். ஆனால் இரண்டாவது (religion) மார்க்கம் என்பது பிக்ஹுகிரந்தங்களில் பிரயோகிக்கப்பட்டு அலலது ஏதாவது ஒரு மூலாதாரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை மட்டும் குறிக்கின்றது கிரந்தங்களில் குறிக்கப்பட்டிருப்பதைப் போல தொழுகை, நோன்பு,ஸகாத், குடும்பவியல் சட்டங்கள்,திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமைச்சட்டங்கள்,அத்தோடு பொருளாதார சட்டங்கள் கொடுக்கல் வாங்கல்கள், வியாபாரம், வட்டி, குத்தகை, வாடகை, பங்குடமை, என்பனவும் இடம்பெற்றுள்ளன, அத்தோடு அரசியல் செயல்பாடுகள், இராணுவ சட்டங்கள், இமாமத்தின் கடமைகள் நன்மையை ஏவித்தீமையை தடுக்கும் செயற்பாடுகள். ஜிஹாத், போன்ற அம்சங்களும் உள்ளடக்கப்படுள்ளன, எனவே (religion) மார்க்கம் என்பது முஸ்லிம்களுடன் தொடர்புடைய எல்லா நற்காரியங்களையும் உள்ளடக்கும் எனலாம்.

அடுத்து, (religion) மார்க்கம் என்பது குறிப்பிட்டு அணுகப்பட வேண்டியதாகும். அதாவது உலகவிவாகாரங்களுக்கு நேர் எதிரான தோற்றப்பட்டை அது தரலாம். அதாவது மார்க்க விடயம் என்பது உலக விடயங்களின் மறுபக்கம் என்றும் கருத்துக் கொள்ளப்பட முடியும். நபிகளார் ஒருதடவை சொன்னார்கள் “ மார்க்கம் சார்ந்த விடயங்களாயின் அதற்கு நான் இருக்கின்றேன் உலக விடயங்களாயின் அதனை நீங்களே கையாண்டு கொள்ளுங்கள்”. எனவே இங்குதான் எமக்கு தெளிவான விளக்கம் தேவைப்படுகின்றது. நபிகளார் மார்க்க விடயம் உலக விடயம் எனக் கூறவந்தது பின்வரும் உதாரணத்தின் மூலம் தெளிவாகும். “ மதீனாவின் தோட்டங்களில் இடம்பெற்ற செயற்கையான மகரந்தச் சேர்க்கை தொடர்பாக நபிகளார் சொன்னார்கள் – அவற்றில் பயனிருப்பதாக நான் உணரவில்லை, உடனே எல்லா ஸஹாபிகளும் மகரந்தச் சேர்க்கை செய்வதை கைவிட்டுவிட்டார்கள். அவ்வருடம் விளைச்சல் குறைவாக இருந்தது, இதனை அறிந்துகொண்ட நபிகளார் கூறினார்கள், நான் எனது சொந்தக்கருத்தையே கூறினேன் அதில் நான் அனுபவம் மிக்கவன் அல்ல நீங்கள் அதனை தொடர்ந்தும் மேற்கொள்ளுங்கள் “உங்களது விவகாரங்களில் நீங்களே அறிவுடையவர்கள் என்றார்கள்”. மேலும் இன்னுமொரு இடத்தில் நபிகளார் சொன்னார்கள் “ அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாக நான் கூறுவதைப் பின்பற்றுங்கள், அல்லாஹ்வின் விடயத்தில் நான் ஒருபோதும் பொய் சொல்லப்போவதில்லை” பிரிதொரு இடத்தில் “நான் மார்க்கவிவகாரங்களில் உங்களுக்கு கட்டளையிட்டால் அதனை பின்பற்றுங்கள், எனது சொந்த அறிவின் அடிப்படையில் நான் முடிவுகளை அறிவித்தால் நானும் ஒரு மனிதன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மார்க்கம் என்பதும் மார்க்கம் சார் என்பதும் இரண்டு கருத்தியல்கள் என்பதை விடவும் ஒன்றில் ஒன்று சார்ந்து நிற்கும் பதங்களாகவே அமைகின்றது. “ நபிகளாரின் காலத்தில் மார்க்கம் சார் நடத்தைகள் என்பது இறைவழிகாட்டலின் பின்னணியில் அல்லது இஜ்திஹாதின் அடிப்படையில் இடம்பெறும் செயற்பாடுகளாகும். எனவே மார்க்க விடயங்களாயினும் அல்லது மார்க்கம்சார் விடயங்களாயினும் சம அந்தஸ்தில் வைத்து நோக்கப்பட வேண்டியாதாகும். அதேவேளை நபிகளார் இல்லாத சூழலில் உலகியல் நடத்தைகள் என்பது இஜ்திஹாதுடன் மட்டும் தொடர்புடையனவாக இருக்கின்றன, அங்கு நேரடியான இறைவழிகாட்டலை அவதானிக்க முடியாது. நபிகளாருடைய உலகியல் நடத்தைகள் பற்றிய தெளிவான அறிவைப்பெற்றிருத்தல் பின்வரும் காரணிகளால் முக்கியத்துவம் பெறுகின்றது.

1. இஸ்லாத்தில் உலகியல் நடத்தைகளுக்கும் மார்க்க நடத்தைகளுக்கும், அரசியலுக்கும் மார்க்க கடமைகளுக்கும் இடையிலான மிக நுட்பமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவதற்கும்.

2. இஸ்லாம் எக்காரணம் கொண்டும் அரசியல் செயற்பாடுகளை குறுகிய கண்கொண்டு நோக்கியதில்லை, எனவே இஸ்லாத்தின் பெயரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் இருந்தும் தனியுரிமைகளிலிருந்தும் அக்கபூர்வமான சிந்தனைகளை விடுவிப்பதற்கும். குறுகிய கன்ணோட்டங்களிலிருந்து விடுபட்டு முற்போக்காக சிந்திப்பதற்கும்.

3. அத்தேடு நபியவர்கள்(ஸல்) இமாமாக இருக்கின்ற நிலையில் மக்களின் விருப்புக்கு அமைவாக தனது பல்வேறு செயற்பாடுகளை திருத்திகொண்டும் மறுபரிசீலனை செய்தும் உள்ளார்கள், எனவே இத்தகைய தெளிவு எம்மிடமும் ஏற்படுவதற்கும்

இமாம் என்ற நிலையில் சில நபித்துவ செயற்பாடுகள் சட்டவாக்கத்துடன் தொடர்பு உடையன அல்ல, அவை சுன்னா என்று ஏற்றுக்கொள்வதே பொறுத்தம், நபியவர்களால் பொதுவிருப்புக்கு அமைய கலந்தாலோசனையுடன் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும் உள்ள அமைப்பிலேயே பின்பற்றப்படுதல் வேண்டும், சமூக தலைமைத்துவம் மற்றும் சட்டவாக்கத்துறையில் உள்ளோர் மட்டுமே அத்தகைய பொதுவிருப்பின் (இஜ்மா) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சட்டங்களில் திருத்தங்களோ அல்லது மாற்றங்களே ஏற்படுத்த முடியுமே தவிர ஏனயோர் அவற்றை அவ்வாறே பின்பற்றக்கடமைப்பட்டுள்ளார்கள். இப்னுல் கையும் இதனைப்பேசும்போது, “நபிகளாரினதும் (ஸல்) கலீபாக்களினதும் சில சட்டங்கள் ஷரீஆவை மையப்படுத்திய விதிமுறைகளாகவும், சிலபோது தற்காலிகமான வையாகவும், காலம் இடம் என்பவற்றுடன் தொடர்புடையதாகவும் அமையப்பெற்றன. பெரும்பாலும் இவை எப்போதும் சட்டவாக்கத்துடன் தொடர்புபட்டே இருந்துவருகின்றன. ஒவ்வொருவருக்கும் அதற்கேயுரிய நன்மையும் மன்னிப்பும் நிச்சயம் இருக்கும். “இஜ்திஹாதில் ஈடுபடுவோருக்கு இரண்டு அல்லது ஒன்று என்ற அடிப்படையில் நன்மைகள் இருக்கும்.”

சிவில் தேசமொன்றை உருவாக்குதல்:

இமாம் (தேசத்தின் தலைவர் ) என்ற ரீதியில் ஷரீஆவின் அடியாக நின்று நபிகளார் மேற்கொண்ட நடவடிக்கைகளும் கடைப்பிடித்த நிலைப்பாடுகளும் அரசியலின் பிக்ஹ்இனை மீளாய்வுசெய்வதற்கும், புணர்நிமானம் செய்வதற்கும் உந்துகின்றது. அத்தோடு ஷரீஆவை மையப்படுத்திய நிலைப்பாடுகளை அறிந்துகொள்வதற்கான வழிமுறைகளை; இஸ்லாமிய எழுச்சியை சிந்தனைரீதியாகவும்,நடைமுறையிலும் ஏற்படுத்துவதில் ஆர்வம்கொண்டோருக்கு கற்றுக்கொடுக்கவும் தூண்டுகின்றன.

குறிப்பாக அரசியலிலும் பொதுவாக எல்லா நடவடிக்கைகளிலும் இறைவழிகாட்டலினால் ஏற்படுத்தப்பட்டது எவை என்றும் மனித அறிவின் அடிப்படையில் நிறுவப்பட்டவை எவை என்பதும் மிகவும் தெளிவாக வேறுபடுத்தி நோக்கப்பட்டுவிட்டது. இமாம் (தேசத்தின் தலைவர் ) என்ற ரீதியில் நபிகளாரின் நடத்தைகளின்பால் உள்ள தெளிவான விளக்கமானது மிகமுக்கியமானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான ஒரு அடித்தளைத்தை ஏற்படுத்துகின்றது. அதனூடாக சமகாலத்தில் நிலவும் எத்தனையோ விடயங்களையும், அரசியல் நடத்த்தைகளையும், சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்தமுடியும், அவற்றில் சில வருமாறு.

1. குறிப்பாக இஸ்லாமிய அரசியல் விவகாரத்தில் இமாம் (தேசத்தின் தலைவர் ) என்ற ரீதியில் நபிகளார் ஏற்படுத்திய முன்மாதிரிகள் இஸ்லாம் மார்க்கம்சார் அரசியலை போதிக்கவில்லை மக்கள் நலன்சார் அரசியலையே அது தோற்றுவித்தது என்பதைக்காட்டுகின்றது. இதுவே இஸ்லாமிய அரசியல் குறித்து மேலைத்தேயத்தின் மிகப்பிரதானமான நம்பிக்கையாகும். ஆனால் நபிகளாரின் அரசியல் ஒழுங்குகள் மக்களின் நல்னகளுக்கே மிகவும் கூடுதல் முக்கியத்துவம் வழ்ங்கியிருப்பதனூடாக மேலைத்தேயத்தின் கருத்து வலுவிழக்கின்றது. அத்தோடு இமாம் என்ற காரணத்திற்காக தலவருக்கு எவ்வித தூய அந்தஸ்தோ அல்லது புனிதத்தன்மையோ இல்லை என்பதையும், அதனால் அவருக்கு முடிவுகளை மக்களின்மீது சுமத்தும் அதிகாரமே இல்லை என்பதும் தெளிவாகின்றது. இஸ்லாமிய தேசம் தத்துவார்த்த தேசம் அல்ல, அது இறைவழிகாட்டல்களால் மட்டும் நிரம்பிவழியும் தேசமுமல்ல, மக்களாலும் அவர்களது விருப்புகளாலும் ஏற்படுத்தப்பட்ட தேசம்,

அது உலகளாவிய தேசம். மக்களால் மக்களின் விருப்பினால் வளம்பெறும்தேசம், நடைமுறைக்கேற்ற மனித இயல்புக்கேற்ற இறைவழிகாட்டலின் மேல் எழுப்பப்ட்ட உன்னத தேசம். இஸ்லாத்தில் தலவர் என்பவர் எதேச்சாதிகாரத்தை அமுல்படுத்துபவர் அல்ல, அவரும் ஒரு சாதாரண மனிதரே, மக்களை நிர்வகிக்கும், ஒழுங்குபடுத்தும் அதிகாரம் வழங்கப்பட்ட மனிதர், அவர் மக்களின் பிரதிநிதி, மக்களோடு தொடர்புபடும் எல்லா நடத்தைகளுக்கும் அல்லாஹ்விடம் பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்.

ஆனால் முன்னைய சட்டத்துறை அறிஞர்கள் ஷரீஆ சார்ந்தவிடயங்களில் மட்டும்தான் தலைவர் அல்லஹ்விடம் பதில் கூறவேண்டும் என்ற கருத்தைக்கொண்டுள்ளார்கள். எனினும் அவர்களது விளக்கம் தவறானது என இன்னும் சிலர் குறிப்பிடுகின்றார்கள், அபூ அல் ஹஸன் அல் மவ்ரித் இதனை இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார் “ இமாமத் என்பது நபித்துவத்தின் பிரதிநிதித்துவம் போன்றதாகும் இமாம் மார்க்கவிடயங்களையும் உலகியல் அரசியல் விடயங்களுக்கும் இணைத்தே அப்பொறுப்பை ஏற்றுள்ளார்” இமாம் இப்னு கல்தூனுடைய கருத்து பின்வருமாறு உள்ளது “ மார்க்க, மற்றும் உலகியல்,அரசியல் விடயங்களுக்குமான அதிகாரமாகும் கலீபா என அழைப்பது நபிகாளைரைப் பின் தொடர்ந்தவர் என்ற அர்த்ததிலேயேயாகும் நபிகளார் உம்மத்தின் எல்லா விடயங்களையும் கையாண்டார்கள்”

நபித்துவத்தைப் பின் தொடர்தல் என்பது இமாமத் என்பதில் ஒரு தெளிவற்ற தன்மையைத் தோற்றுவிக்கின்றது. எனினும் நபித்துவத்தின் இயல்பான நடத்தைகளை அறியும்போது நபிகளார் இமாமத் என்ற வகிபாகத்தில் தன்னை ஒரு சாதாரண மனிதர் என்றே அறிமுகம் செய்துள்ளார்கள் எனவே இமாமத் என்பது நபித்துவத்தின் பின் தொடர்தல் என்பதாக அர்த்தமாகாது, அது தலைமைத்துவதைத் தொடர்தல் என்றே பொருள்படும். இதுவே பொரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

2. மார்க்கத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகள் சமகால அரசியல் சிந்தனைகளில் நிலவும் சிக்கல்கள், கருத்துமுரண்பாடுகளை களைகின்றது, மேலைத்தேயர்களும் ஏனைய சிந்தனையாளர்களுடனும் இஸ்லாமும் முஸ்லிம்களும் பொதுவான விடயங்களில் இணைந்து செயலாற்ற முடியும் என்ற கருத்தைத் தருகின்றது. இதன்படி ஏனய நடைமுறைகளிலிருந்து நன்மையடைவதை இஸ்லாம் வரவேற்கின்றது, எமக்குரிய ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் ஊடாக எமது அனுபவங்களை மேற்குலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மனித அரசியல் அனுபவங்கள் உறுதியான தேசங்களை அடைந்துகொள்வதற்கும், தேச நிர்வாகத்திற்கும் பங்களிப்புச்செலுத்தியுள்ளன. மனித சட்டங்களையும் இறைசட்டங்களையும் இணைப்பதனூடாக ஒரு காத்திரமான சட்ட உருவாக்கத்திற்கு எப்படி முனையலாம் என்பதை மேலைத்தேய சட்ட உருவாக்கம் தொடர்பில் அழமான பார்வையைச் செலுத்துவதன் மூலம் அறிந்து கொள்தல் முடியும். இவ்வாறான ஒரு காத்திரமான நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டதாலேயே, மிகப் பொதுவானதும் ஷரீஆவின் அடிப்படை இலக்குகளுடன் தொடர்புடைய விடயங்கள் தவிர்த்து வேறு எவ்விதமான மார்க்க ரீதியான தொடர்பும் அற்றதாக அரசியல் அமைகின்றது, அதனேடு மனிதர்களும் உலகியல் நடத்தைகளும், நபிகளாரின் மனிதப் பண்புகளைக் கொண்ட தலைமைத்துவ முன்மாதிரிகளும் இஸ்லாமிய அரசியலுடன் தொடர்புபடுகின்றன

முஸ்லிம் யாப்புசார் சட்டவியலாளர்கள் (முன்னைய, பிந்திய இருசாராரும்) உம்மத் அல்லது பிராந்தியத்தின் மக்களே சட்டநிர்ணய உரிமைகொண்டவர்கள் என்ற விடயத்தில் உடன்பாட்டுடன் இருக்கின்றார்கள். நபிகளார்(ஸல்) தனக்குப்பின்னால் உள்ள தலைமை த்துவத்தை நியமிக்காமலேயே வபாத்தானார்கள், அவர்கள் அடுத்த தலைவரைத்தெரிவு செய்வதற்கான முறைமையை முடிவுசெய்வதும் தலைவரைத்தெரிவு செய்வதையும் மக்களின் தெரிவிற்கே விட்டுவிட்டார்கள். இது நபிகளாரின் மிகமுக்கிய முன்னுதாரணமாக க்கொள்ளப்படுகின்றது. தலைவர்களைத்தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கே உரியது சத்தியப்ப்ரமானம் மற்றும் பைஅத் என்பன மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான தொடர்பைப்பேணும். மக்களில் ஒருசிலர் வெறுத்தபோதிலும் பெரும்பாலானவ்ர்களின் விருப்பு இம்மாமிற்கு அவசியமாகின்றது அவ்வாறான தலைவர் மக்களுக்கும் படைப்பாள்னுக்கும் பொருப்புக் கூறுபவராக இருப்பார்.

மேற்படி கருத்தில் பொதுவாக எல்லா சட்ட இமாம்களும் உடன்பாடு காணுகின்றார்கள், சமகால அறிஞர்களும் உடன்படுகின்றார்கள், ஆனால் இமாம் ஷர்பி (ரஹ்) அவார்கள் மட்டும் ஒரு மாற்றுக்கருத்துடன் இருக்கின்றார்கள், “மக்கள் வெறுக்கின்ற இமாமின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்ற நபிமொழியை இங்கு சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு ஒரு கூட்டத்தார் வெறுக்கின்ற நிலையில் தலைமைத்துவத்திலிருப்பதை இமாமவர்கள் வரவேற்கவில்லை” “ தன்னை வெறுக்கின்ற ஒரு கூட்டத்தாரை ஆட்சிசெய்வது வரவேற்கத்தக்கவிடயமல்ல, பெரும்பான்மையினர் விரும்புகின்றபோதிலும் சிற்பான்மையினர் விரும்பாதபோதிலும் சரியே, விலாயாத்தின் அடிப்படையில் இது தவறானதே. எவ்வித ஐயப்பாடுமின்றி ; எப்படி மக்கள் வெறுக்கின்ற இமாமொருவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையோ அப்படியே அவரது அரசாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவும் இமாம் ஷர்பி (றஹ்) கருதுகின்றார்கள்

இஸ்லாமிய வரலாற்றில் ஆட்சி அதிகாரம் எப்பொழுதும் ஏதோ ஒருவகையில் உம்மதுடன் சார்ந்தே இருந்திருக்கின்றது. ஒரு தேசத்தின் வீழ்ச்சியில் புதிய தேசங்கள் உருவாகியுள்ளன. நீதியைநிலைநாட்டாத, உறுதிப்பாட்டைப்பேணாத, மக்களின் நலன்களில் அக்கரைகாட்டாத, இஸ்லாமிய ஆட்சிப்பிரதேசத்தை எதிரியின் பிடியில் இருந்து காப்பதற்குத்தவறிய எல்லா அரசுகளும் வீழ்ச்சியைத் தழுவியிருக்கின்றன. சிலர் பொதுவாக இரு உலக பயன்களையும் அடையும் பொருட்டு தேசங்களை நிறுவுவர், மக்களும் அவரது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்குவர், அவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வர், புரட்சிகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு அரபுதேசங்கள் பலவற்றில் உண்மையில் மக்கள்தேசம் என்ற அடையாளம் எடுபட்டுவிட்டது. சுதந்திரம், பொதுவிருப்பு,பொதுநீதி என்பனவே தேசமொன்றின் அடிப்படை அடையாளங்கள், ஆனால் அரபு தேசங்கள் பலவற்றின் ஆரம்பங்களின் பின்னால் இத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்திருப்பினும் பின்னர் அவை எதேச்சாதிகார அரசுகளாக மாறிவிட்டுள்ளன. பலசந்தர்ப்பங்களில் சுதந்திரம், சமூகநீதி என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

அரசாட்சியின் முழுமையான வடிவம் என்பது உம்மத்தின் அடிப்படைத் தேவையாக மார்க்கவிடயங்களை முன்னெடுப்பது என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. அது தத்துவார்த்தமானதல்ல மாற்றமாக இதுவே நடைமுறைஇல் இருக்கின்றது. இன்னும் அரசாட்சி என்பது மார்க்கத் தைப்பாதுகாத்தலையே பிரதான இலக்காகக் கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து முதன்மை பெறுகின்றது.அனால் எனைய நவீன சிவில் தேசங்கள் மக்களையும் அவர்களது நலன்களையும் காப்பதை தமது பிரதான இலக்காகக் கொண்டுள்ளன.

இதே கருத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நிறுவனங்களின் யாப்புகளிலும், அவற்றின் நிர்வாக முறைமைகளிலும், தேர்தல், ஏனைய அமைப்பு களினுடனான தொடர்புகள் என பெரும்பாலான விடயங்களில் மார்க்கத்தைப் பாதுகாத்தல் என்பதே முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது மாற்றமாக அதன் அங்கத்தவர்களையும் அதன் பொதுநலன்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் இத்தகைய விடயங்கள் அனைத்தும் தனிப்பட்ட இஜ்திஹாதுடன் தொடர்புடையவை என்பது உணர்த்தப் படவேண்டும்.

3.நேர்வழிவந்த இஸ்லாத்தின் கலீபாக்களுடைய ஆட்சிக்கால வரலாற்றை அணுகுதல்: சமகால் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஏனைய சிந்தனைத்தளங்களில் கலீபாக்களுடைய ஆட்சிக்கால தாக்கம் வெகுவாக இருக்கின்றது. இதுவே மிகவும் உன்னதமான முன்னுதாரணம் மிக்க காலப்பகுதியாகும். ஆனால் அதே சந்தர்ப்ப சூழல் நிலைமைகளுடன் அதே முறைமைகளை அப்படியே அமுல்படுத்திவிட முடியும் என எண்ணம்கொள்ள முடியாது.

இருப்பினும் நபிகளாரின் அரசியக் முறைமைகள் எப்படி சமகாலத்துடன் பொருந்திவருகின்றனவோ அவ்வாறே கலீபாக்களின் விவ்காரங்களும் பொருந்திவரவேண்டும். எப்படி நாம் நபிகளாருடைய பொதுவான வழிமுறைகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவாதாக இருப்பின் நபிகளாரைத்தொடர்ந்த கலீபாக்களுடைய முறைமைகளையும் கருத்தில் கொள்வது எவ்வித பின்வாங்கலும் இன்றி அவசியமாகின்றது. அவர்களது இஸ்லாமிய அணுகுமுரைமைகள், ஆரச நிர்வாக முறைமைகள் என்பவற்றில் ஏராளமான வழிகாட்டல்கள் இருக்கின்றன.

கலீபாக்களின் ஆட்சிக்கால வரலாற்றின் ஊடாக நிருவன முறைமைகள், யாப்புச்செயன்முறைகள், அரசியல் சட்ட வியாக்கியானங்கள், என்பவற்றில். கலாசார நிலைமகள், காலத்தின் தாக்கம், இன்னும் மனிதச்செயற்பாட்டின் இயல்பான தன்மைகளை உணர்ந்துகொள்ளமுடியும். ஆனாலும் அவர்களது காலத்தின் முன்மாதிரிகள் மார்க்கத்தின் பகுதியாக எல்லாக்காலங்களிலும் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படவேண்டும் என்ற கட்டாயத்தன்மை எங்கும் வலியுருத்தப்படவில்லை. காரணம் ஒவ்வொருகாலத்திலும் அக்காலத்திர்குரிய தேவைகளின் அடிப்படையில் இஸ்லாமிய அரசியல் நெகிழ்ச்சியுடன் தொழிற்பட வேண்டும் என்பதற்காகவேயாகும் .

முடிவுரை

முஸ்லிம்களின் இஸ்லாமிய அரசியல் நடைமுறை குறித்த விளக்கங்கள் மனிதகுல அரசியல் சிந்தனையிலும் நடைமுறையிலும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இஸ்லாமிய அரசியல் உலகின் ஏராளமான அரசியல் நடத்தைகளுக்கு முன்மாதிரியாகா இருந்திருக்கின்றது. அனால் காலவேட்டத்தில் அத்தகைய பரந்த சிந்தனைத்தளத்திலிருந்து முஸ்லிம்சமூகம் ஒரு குறுகிய பார்வை வட்டத்துள் தன்னை உட்படுத்திக்கொண்டது, இத்தகைய விளக்கமில்லாத தன்மைகள்; ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் இஸ்லாமிய அரசியல் முறைமைகளினூடாக அடையப்படவேண்டிய சரியான நன்மை களையும் பயன்களையும் தாமதப்படுத்தியுள்ளன அல்லது தடுத்துள்ளன. அல்குர் ஆனும் நபியவர்களின் சுன்னாவும் அதனை மிகச்சரியாக விளங்கிக்கொள்ளும் கூட்டத்தாருக்கே மிகவும் இலகுவானதும் நன்மைபயக்கத்தக்கதுமான வழிகாட்டலை வழங்கும், அல்லாதவருக்கு மிகவும் சுமையானதும் சிக்கலுமான நிலைமைகளை எஞ்சும்.

இஸ்லாமிய சிவில் தேசமொன்றை இஸ்லாமிய சிந்தனைகளின் அடைப்படையில் முஸ்லிம் மக்கள்மயப்படுத்தப்பட்டதாக, பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளினூடாக எவ்வித தாமதமும் நிறுத்தமும் இன்றி நிறுவமுற்படுவது, மிகவும் சரியான மக்கள்மையப்படுத்தப்படும் ஜனநாயக ஒழுங்கொன்றை அடையாளப்படுத்த உதவும். முழு உலகும் இஸ்லாமிய சிந்தனைகளினால் வளம்பெரும், இஸ்லாமிய நடைமுறைகள் காலத்திற்கு ஒவ்வாதவை என்ற கருத்து எடுக்கப்பட்டு இஸ்லாமிய நடைமுறைகள் மிக இலகுவாக மக்கள் மனங்களை கவரும். மக்களின் உண்மையான விருப்பின் அடிப்படையில் அமைந்த ஜனநாயகத்தை உலகும் உணர்ந்துகொள்ளும். அதுவே இஸ்லாமிய சிவில் தேசம்.

No comments: